தேசிய செய்திகள்

விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிரடி சோதனை: ரூ.70 லட்சம் கஞ்சா, ரூ.1.64 கோடி தங்கம் பறிமுதல்

வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து இங்கு விமானத்தில் வருவோர் தங்கம், போதைப் பொருட்களை கடத்தி வருவது அதிகரித்து வருகிறது.

தேவனஹள்ளி,

பெங்களூரு புறநகர் தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து இங்கு விமானத்தில் வருவோர் தங்கம், போதைப்பொருட்களை கடத்தி வருவது அதிகரித்து வருகிறது. இதை தடுக்க சுங்கவரித்துறையினரும், போலீசாரும் சோதனை நடத்தி கடத்தல் ஆசாமிகளை கைது செய்து வருகிறார்கள்.

சோதனை

இந்த நிலையில் தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் இருந்து பெங்களூருவுக்கு வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகள், அவர்களின் உடைமைகளை சுங்கவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ஒரு பயணி தனது உடைமையில் பதுக்கி வைத்து கடத்தி வந்த 2 கிலோ 2 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.70 லட்சத்து 70 ஆயிரம் ஆகும். இதுதொடர்பாக பயணி கைது செய்யப்பட்டார்.

கைது

அதுபோல் துபாயில் இருந்து விமானத்தில் வந்த பயணி ஒருவர் தனது டவுசர் பாக்கெட்டில் தங்க கட்டிகளை பதுக்கி கடத்தி வந்தார். அவரை கைது செய்த சுங்கவரித்துறை அதிகாரிகள் ரூ.1 கோடியே 64 லட்சம் மதிப்பிலான 1 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். 2 பயணிகளிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT