மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வந்தது. தற்போது மணிக்கு 15 கி.மீ வேகமாக நகர்ந்து வருகிறது. இதன் நகர்வு வேகம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அர்னாப் புயல் நாளை தீவிர புயலாக மாறி, நாளை மறுநாள் விசாகப்பட்டினம் மற்றும் பபாத்லா இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 115 முதல் 125 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். புயல் காரணமாக, அந்தமான் நிக்கோபார் தீவு நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, இன்றும் நாளையும் பள்ளிகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேரிடர் மேலாண்மை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுமக்கள் வானிலை நிலவரங்களை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்றும், அரசு வெளியிடும் எச்சரிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.வங்கக்கடலில் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வானிலை சீராகும் வரை சுற்றுலா, பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் கடலோர, கடல்சார் செயல்பாடுகளைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
அர்னாப் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று நள்ளிரவுக்குள் மேற்கு-மத்திய வங்கக்கடல் பகுதியில் தீவிரப் புயலாகவும், நாளை அதே பகுதியில் மிகத் தீவிரப் புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது