தேசிய செய்திகள்

மற்ற நாடுகளை விட இந்தியாவில் சிலிண்டர் விலை மிகவும் குறைவு: மத்திய அரசு விளக்கம்

அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ள விலையை விட இந்தியாவில் மிகவும் குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில்தான் சமையல் எரிவாயு விலை குறைந்த அளவில் உள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக பெட்ரோலிய அமைச்சகம் கூறியிருப்பதாவது:- சர்வதேச சந்தையின் அடிப்படையில்தான் பெட்ரோலிய பொருட்களின் விலைகள் நிர்ணயம் செய்யப் படுகிறது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ள விலையை விட இந்தியாவில் மிகவும் குறைவு. பிரதம மந்திரி உஜ்வாலா ஜோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகள் ஒரு வீட்டு உபயோக சிலிண்டருக்கு ரூ.642 செலுத்த வேண்டியநிலையில், சாதாரண நுகர்வோர் ரூ.942 செலுத்துகிறார்கள். அதே சமயம் விநியோக செலவு ரூ.1600-க்கும் அதிகமாகிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டே வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.29 உயர்த்தபபட்டு உள்ளது. எனினும் நுகர்வோருக்கான விலையை தொடர்ந்து அரசு கட்டுப்படுத்தி வருகிறது. சிலிண்டருக்கான அதிக விலை சுமையை அரசாங்கமே ஏற்றுக்கொள்கிறது. சர்வதேச அளவில் விலை உயரும்போது இந்த சுமையை அரசு தாங்கியுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.