பெங்களூரு,
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருவதுடன், மோதல் தொடர்ந்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்ற நிலை காணப்படுகிறது. மேற்கு ஆசிய போர்ச்சூழல் காரணமாக எரிபொருள் வினியோகத்தில் உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.
மேலும் ஈரான் கடல் வழியாக அதாவது ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல் போக்குவரத்தை ஈரான் தடுத்து நிறுத்தியுள்ளது. இதனால் பிற நாடுகளுக்கு எண்ணெய் கொண்டு செல்வது முற்றிலும் தடைபட்டுள்ளது.
இதன் காரணமாக இந்தியாவில் இயற்கை எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டில் குறிப்பாக வணிக பயன்பாட்டுக்கான சமையல் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியுள்ளது. வணிக நிறுவனங்களுக்கு கியாஸ் சிலிண்டர் வினியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த கியாஸ் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காண வேண்டும் என்று மத்திய-மாநில அரசுகளுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 4-வது நாளாக நேற்றும் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கியாஸ் தட்டுப்பாடு நிலவியது. நேற்று ஒரே நாளில் 25 சதவீத ஓட்டல்கள் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவரை சுமார் 65 சதவீத ஓட்டல்கள் மூடப்பட்டு உள்ளன.
போதிய இட வசதி உள்ள ஓட்டல்கள் விறகு அடுப்புகளில் உணவுகளை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றன. அடுத்த சில நாட்களில் கியாஸ் வினியோகம் சீராகாவிட்டால் தற்போது இயங்கும் சில ஓட்டல்களும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு மட்டுமின்றி, மைசூரு, மங்களூரு, உப்பள்ளி, பெலகாவி, விஜயாப்புரா, சிக்கமகளூரு, மண்டியா, ஹாசன், துமகூரு, சித்ரதுர்கா, உடுப்பி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. ஓட்டல்கள், உணவகங்கள் மூடப்பட்டு வருவதால், வெளியூர்களில் இருந்து வந்து தங்கி தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர், மாணவர்கள் என லட்சக்கணக்கான மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து பெங்களூரு ஓட்டல் உரிமையாளர்கள் சங்க கவுரவ தலைவர் பி.சி.ராவ் கூறுகையில், "எங்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்தை முற்றிலும் நிறுத்திவிட்டனர். இருப்பினும் நாங்கள் இருப்பு உள்ள சிலிண்டர்களை வைத்து குறைந்த அளவு உணவுகளை தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம்.
வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பது எங்களின் எண்ணம். கியாஸ் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்களில் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. 4 நாட்களில் ரூ.100 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. ஓட்டலை நம்பியுள்ள பல தொழிலாளர்களும் வேலை இழப்பை சந்தித்து வருகின்றனர். இந்த விவாகரத்தில் மத்திய, மாநில அரசுகள் விரைவாக தீர்வு காண வேண்டும்" என்று தெரிவித்தார்.