புதுடெல்லி,
திபெத்திய புத்த மத துறவியான 14-வது தலாய் லாமா, 1935-ஆம் ஆண்டு ஜூலை 6-ந்தேதி, திபெத்தின் அம்டோ பகுதியில் உள்ள தாக்சர் என்ற சிறிய கிராமத்தில் ஒரு திபெத்திய விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக சிறுவயதிலேயே இந்தியாவில் அரசியல் தஞ்சம் புகுந்து விட்டார். அவருடன் வந்த லட்சக்கணக்கான திபெத் மக்கள் இந்தியாவில் வசிக்கின்றனர். இவர்கள், திபெத் மீதான சீனாவின் ஆட்சியை ஏற்பதில்லை.
இந்நிலையில், தலாய் லாமாவின் 91-வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள மத தலைவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது;-
"புனித தலாய் லாமாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அமைதி மற்றும் நல்லிணக்கம் குறித்த அவரது செய்தி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு ஒரு வழிகாட்டும் சக்தியாக இருந்து வருகிறது. அவரது அறமும் மற்றும் ஆன்மீக வலிமையும், உலக நலனுக்கான அவரது அர்ப்பணிப்பும் பாராட்டுக்குரியவை. அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்.”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.