தேசிய செய்திகள்

திருமணத்துக்கு வற்புறுத்தியதால் நடன ஆசிரியை கழுத்தை நெரித்து கொலை - கள்ளக்காதலன் போலீசில் சரண்

ஆத்திரமடைந்த விக்னேஷ் தனலட்சுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

திருச்சூர்,

திருச்சூர் அருகே விடுதி அறையில் நடன ஆசிரியை கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கள்ளக்காதலன் போலீசில் சரணடைந்தார்.

விடுதியில் உல்லாசம்

கேரளம் மாநிலம் மலப்புரம் மாவட்டம் குன்னமங்கலம் அருகே உள்ள சேரூர் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி (55 வயது). நடன ஆசிரியை. இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதற்கிடையே தனலட்சுமிக்கும், மலப்புரம் அருகே தேஞ்சிப்பலம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்கிற விக்கீஷ் (39 வயது) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி தனலட்சுமி தான் ஒரு நடன நிகழ்ச்சிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு கள்ளக்காதலன் விக்னேசுடன் திருச்சூர் வந்தார். செருதுருத்து பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து இருவரும் தங்கினர். அங்கு விக்னேஷ் குடிபோதையில் தனலட்சுமி உடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் தனலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார்.

திருமணத்துக்கு வற்புறுத்தல்

அதற்கு விக்னேஷ் சில மாதங்களுக்கு பிறகு பார்த்துக்கொள்ளலாம் என கூறினார். இதை ஏற்காமல் தனலட்சுமி தகராறு செய்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் தனலட்சுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பயந்து போன அவர், விடுதி அறையின் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு தனது சொந்த ஊரான மலப்புரத்திற்கு சென்று விட்டார். அங்கு சென்ற பின் விக்னேஷ் பயத்தில், விடுதியில் நடந்ததை தனது சகோதரியிடம் கூறியுள்ளார்.

அவரது ஆலோசனையின்படி, விக்னேஷ் தேஞ்சிப்பலம் போலீசில் சரணடைந்தார். அங்கு போலீசாரிடம், தனலட்சுமியை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிவித்தார். இதையடுத்து தகவல் அறிந்த செருதுருத்தி போலீசார் அந்த விடுதிக்கு சென்று, அறை கதவை உடைத்து தனலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விக்னேசை கைது செய்தனர்.