தேசிய செய்திகள்

தசரா விழா: மைசூரு அரண்மனையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு 5 நாட்கள் தடை

தர்பார் ஹாலில் ரத்தின சிம்மாசனத்தை ஜோடிக்கும் பணிகள் நடைபெற உள்ளது.

மைசூரு,

உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா மற்றும் மன்னர் பரம்பரையினரின் தனியார் தர்பார் நிகழ்ச்சிகளுக்கான ஆயத்த பணிகள் மைசூரு அரண்மனையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை முன்னிட்டு, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மொத்தம் 5 நாட்கள் சுற்றுலா பயணிகள் அரண்மனையை பார்வையிட தடை விதிக்கப்படுவதாக மைசூரு அரண்மனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரண்மனை மண்டலி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மைசூரு அரண்மனையில் தசரா விழாவை முன்னிட்டு பாரம்பரியமிக்க தங்கம், வைரம், வெள்ளி மற்றும் நவரத்தினங்கள் பதித்த ரத்தின சிம்மாசனம் தர்பார் ஹாலில் அரியணையில் ஏற்றப்பட உள்ளது. இதையொட்டி நாளை (திங்கட்கிழமை) தர்பார் ஹாலில் ரத்தின சிம்மாசனத்தை ஜோடிக்கும் பணிகள் நடைபெறுவதால் அன்று பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

11-ந் தேதி தசரா விழா தொடக்க நிகழ்ச்சியை முன்னிட்டு அரண்மனை மூடப்படும். 20-ந் தேதி ஆயுத பூஜை வழிபாடுகள் காரணமாக அனுமதி ரத்து செய்யப்படுகிறது. 21-ந் தேதி விஜயதசமி சிகர நிகழ்ச்சியான வரலாற்று சிறப்புமிக்க 'ஜம்பு சவாரி' யானைகள் ஊர்வலம் நடப்பதால் அன்று சுற்றுலா பயணிகள் அரண்மனைக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் (நவம்பர்) 19-ந் தேதி தசரா விழா முடிந்ததும், சிம்மாச னத்தை பிரித்து மீண்டும் அரண்மனையின் ரகசிய பாதுகாப்பு அறையில் வைக்கும் பணி நடப்பதால், அன்று மதியம் வரை பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. குறிப்பிட்டுள்ள இந்த 5 நாட்களை தவிர, பிற நாட்களில் சுற்றுலா பயணிகள் வழக்கம்போல் அரண்மனைக்கும், தர்பார் ஹாலில் வைக்கப்பட்டுள்ள ரத்தின சிம்மாசனத்தை காண்பதற்கும் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT