மும்பை,
பிரதமர் மோடி பங்கேற்ற மாநாட்டு மையம் அருகே பிரதமர் அலுவலக அதிகாரி என்ற போலி அடையாள அட்டை மற்றும் துப்பாக்கியுடன் அத்துமீறிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பிரதமர் மோடி நேற்று மாலை மும்பை வருகை தந்தார். அவர் பி.கே.சி.யில் உள்ள நீட்டா முகேஷ் அம்பானி கலாசார மையத்தில் நடந்த உலக நிதி தொழில்நுட்ப மாநாட்டில் கலந்து கொண்டார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை பிரதமர் நிகழ்ச்சி நடைபெற உள்ள அரங்கிற்கு அருகில் உள்ள 'ஜியோ வேர்ல்டு பிளாசா' வணிக வளாகத்துக்கு வாலிபர் ஒருவர் வந்தார். அவருடன் துப்பாக்கியுடன் பாது காவலர் ஒருவரும் வந்தார். துப்பாக்கி வைத்திருந்ததால் அவர்களை வணிக காவலாளிகள் உள்ளே விட மறுத்தனர்.
இதையடுத்து வாலிபர் தான் பிரதமர் அலுவலக அதிகாரி எனக்கூறி அடையாள அட்டையை காண்பித்தார். சந்தேகமடைந்த வணிக காவலாளிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், வாலிபர் காண்பித்தது போலி அடையாள அட்டை என்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார், பிரதமர் அலுவலக அதிகாரி எனக்கூறிய வாலிபர், அவருடன் வந்த பாதுகாவலரை அதிரடியாக கைது செய்தனர். இதில் போலி அடையாள அட்டை வைத்திருந்தவர் ரோகன் பாரிக் (வயது24), உடன் வந்த பாதுகாவலர் திலிப் குண்டே என தெரியவந்தது. இவர்கள் மீது அரசு ஊழியர் போல ஆள்மாறாட்டம் செய்தல், கொடிய ஆயுதத்துடன் அத்துமீறி நுழைதல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் மும்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 2 பேரையும் வருகிற 11-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
இதற்கிடையே நேற்று பிரதமர் மோடி கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சி யில் இவர்கள் துப்பாக்கியுடன் நுழைய முயன்றதாக முதலில் தகவல் பர வியது. ஆனால் அதை போலீசார் மறுத்தனர். இந்த நபர்கள் கைதுக்கும். பிரதமர் மோடி நிகழ்ச்சிக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவித்தனர்.
இருப்பினும் கைதானவர்களின் உண்மையான நோக்கத்தை கண்டறிய மும்பை குற்றப்பிரிவு போலீசாரும் தனியாக விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.