மாடல் அழகிகள் 
தேசிய செய்திகள்

டெல்லியில் அரங்கேறிய கண்கவர் பேஷன் திருவிழா: மாடல் அழகிகள் அசத்தல்!

இந்த பேஷன் விழாவின் துவக்க விழா மற்றும் முதல் நாள் நிகழ்ச்சி ஐதராபாத்தில் கடந்த 23-ந்தேதி நடைபெற்றது.

டெல்லி,

டெல்லியில் நடைபெற்ற கண்கவர் பேஷன் திருவிழாவில் மாடல் அழகிகள் அன்னநடை நடந்து அசத்தினர்.

பேஷன் திருவிழா

பேஷன் டிசைன் கவுன்சில் ஆப் இந்தியா நடத்தும் நாட்டின் மிகப்பிரமாண்டமான ஆடம்பர ஆடை வடிவமைப்பு திருவிழா நடைபெற்று வருகிறது. “ஹூண்டாய் இந்தியா குட்டூர் வீக் 2026” என்ற பெயரில் ஒரு வார காலம் இந்த திருவிழா நடத்தப்படுகிறது.

இதன் துவக்க விழா கடந்த 23-ந்தேதி ஐதராபாத்தில் நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சி மட்டும் ஐதராபாத்தில் நடைபெற்றது. அடுத்த 6 நாட்களுக்கான நிகழ்ச்சிகள் புதுடெல்லியின் தாஜ் பேலஸ் ஹோட்டலில் நடத்தப்படுகின்றன.

அதன்படி கடந்த 24-ந்தேதி முதல் தாஜ் பேலஸ் ஹோட்டலில் பேஷன் ஷோ மற்றும் கண்காட்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் இந்தியாவின் முன்னணி ஆடை வடிவமைப்பாளர்களின் பிரத்தியேக உடைகளை அணிந்து, மாடல் அழகிகள் தங்களின் நேர்த்தியான அன்னநடையால் ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கவனத்தையும் பெற்றனர்.

உலகத்தரம் வாய்ந்த ஆடை வடிவமைப்பு

இந்த பேஷன் விழாவில் இந்திய பாரம்பரிய கைவினைத் திறனுடன், நவீன மேலைநாட்டு வடிவமைப்பு பாணிகள் இணைக்கப்பட்ட ஆடைகள் காட்சிப்படுத்தப்பட்டன. தருண் தஹிலியானி, ஜேஜே வளாயா, மற்றும் பல்குனி ஷேன் பீகாக் போன்ற இந்தியாவின் முன்னனி பேஷன் ஜாம்பவான்களின் உடைகளை மாடல்கள் அணிந்து வந்தனர்.

அழகிகளின் கம்பீர நடை

’ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்' ரயில் பயணம் மற்றும் இந்தியாவின் பாரம்பரிய கைத்தறி கலைகளை மையமாகக் கொண்டு இந்த உடைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. பட்டு, வெல்வெட் மற்றும் ஜரிகை வேலைப்பாடுகள் நிறைந்த வெயிட்டான ஆடைகளை அணிந்திருந்தாலும், மாடல் அழகிகள் மேடையில் மிக லாவகமாக கம்பீர நடை நடந்து வந்தனர்.

ஒளி அமைப்பு-நிறைவு நாள்

கண்ணைக் கவரும் பிரம்மாண்டமான மேடை அலங்காரமும், பழங்கால கடிகாரங்கள் மற்றும் அரசவை பாணி விளக்குகளின் ஒளி அமைப்பும் நிகழ்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றன. இந்த ஆடை அணிவகுப்பைக் காண சர்வதேச பேஷன் விமர்சகர்கள், பாலிவுட் பிரபலங்கள் மற்றும் முன்னணி சமூக ஊடக பிரபலங்கள் என பலரும் திரண்டிருந்தனர்.

தற்போது டெல்லியில் அரங்கேறி வரும் இந்த பேஷன் விழா வரும் 29-ந்தேதி அன்று உலகப் புகழ்பெற்ற வடிவமைப்பாளர் ராகுல் மிஷ்ராவின் இறுதி ஆடை வடிவமைப்புடன் நிறைவடையவுள்ளது.