தேசிய செய்திகள்

அங்கன்வாடியில் வழங்கப்பட்ட உணவில் இறந்து கிடந்த பாம்பு - கர்ப்பிணி பெண் அதிர்ச்சி

இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழுவை அந்த மாவட்ட பொறுப்பு ஆட்சியர் அக்ரிம் குமார் நியமித்துள்ளார்

போபால்,

மத்திய பிரதேச மாநிலம், பாண்டுர்னா மாவட்டத்தின் கர்காட் காம்தி கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி வச்சலா பாய் துர்வே, அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து மாவு பெற்று சென்றுள்ளார்.

குட்டி பாம்பு

வீட்டில் அந்த மாவு பொட்டலத்தை திறந்து பார்த்தபோது, அதற்குள் இறந்த நிலையில் குட்டி பாம்பு ஒன்று இருந்தது கண்டறியப்பட்டது. இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாது, அந்த கிராம மக்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆய்வு

இதனை தொடர்ந்து, குடும்பத்தினர் உடனடியாக அங்கன்வாடி பணியாளர்களுக்கும் உள்ளூர் நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள், அந்த ஊட்டச்சத்து மாவுபொட்டலத்தை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

உணவு பரிசோதனை

இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழுவை அந்த மாவட்ட பொறுப்பு ஆட்சியர் அக்ரிம் குமார் நியமித்துள்ளார். மேலும் அந்த பொட்டலத்திலிருந்து கைப்பற்றப்பட்ட உணவு மாதிரிகள் போபாலில் உள்ள மாநில உணவு பரிசோதனை மையத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் ஆய்வக அறிக்கை மற்றும் விசாரணை முடிவுகள் கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கர்ப்பிணி பெண்ணுக்கு வழங்கப்பட்ட உணவு பொட்டலத்தில் இறந்த பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவ்ம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.