பெங்களூரு,
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் முனிராபாத் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் துங்கபத்ரா ஆற்றுப்பாலம் உள்ளது. இந்த பாலத்தில் நேற்று மதியம் ஒரு டிராக்டர் சென்றது. அந்த டிராக்டரில் 19 பேர் பயணம் செய்தார்கள். பாலத்தில் சென்றபோது பின்னால் வந்த ஒரு டேங்கர் லாரி, டிராக்டர் மீது மோதியது. லாரி மோதிய வேகத்தில் பாலத்தின் தடுப்பு சுவரை இடித்து தள்ளிக்கொண்டு பள்ளத்தில் டிராக்டர் பாய்ந்து கவிழ்ந்தது.
பாலத்தில் இருந்து 25 அடி ஆழ பள்ளத்தில் டிராக்டர் விழுந்தது. இதனால் டிராக்டரின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே ஒரு குழந்தை உள்பட 6 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாலத்தில் இருந்து இறங்கி கீழே ஓடிவந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் டிராக்டரை அகற்றிவிட்டு உயிருக்கு போராடிய 13 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர்களில் ஒருசிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், சாவு எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. 12 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.