தேசிய செய்திகள்

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது 9-ந்தேதி விவாதம்

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசில் சில குறைபாடுகள் இருந்தன.

புதுடெல்லி,

மக்களவையில் எதிர்க்கட்சிகள் மீது பாகுபாடு காட்டுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதற்காக எதிர்க்கட்சிகளை சேர்ந்த 118 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட நோட்டீஸ் ஒன்றை காங்கிரஸ் தலைமை கொறடா கொடிக்குன்னில் சுரேஷ் தலைமையில் கூட்டணி கட்சியினர் மக்களவை செயலாளர் உத்பால்சிங் குமாரி டம் அளித்தனர்.

ஆனால் இந்த நோட்டீசில் சில குறைபாடுகள் இருந்தன. குறிப்பாக தேதி தவறாக இருந்ததாக தெரிகிறது. இதை சபாநாயகர் நிராகரித்திருக்க முடியும். எனினும் அந்த குறைகளை சரி செய்து அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் மக்களவை செயலக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி சபாநாயகருக்கு எதிரான இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம், ஒரு மாத இடைவெளிக்குப் பின் நாடாளுமன்றம் மீண்டும் கூடும் அடுத்த மாதம் (மார்ச்) 9-ந்தேதியே விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மக்களவை வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக குறைபாடுடன் இருந்த நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீசை எதிர்க்கட்சிகள் திரும்பப்பெற்று புதிய நோட்டீஸ் ஒன்றை மக்களவை செயலகத்தில் அளித்தது குறிப்பிடத்தக்கது.