புதுடெல்லி,
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான AI2379 விமானம், கடந்த 4-ந்தேதி தாய்லாந்து நாட்டின் புக்கெட் நகரில் இருந்து டெல்லி நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 137 பயணிகள் மற்றும் 8 விமான குழுவினர் என மொத்தம் 145 பேர் இருந்தனர். இந்நிலையில், நடுவானில் ஏற்பட்ட காற்று கொந்தளிப்பின்(turbulence) காரணமாக, விமானம் திடீரென 300 அடி உயரத்திற்கு கீழே இறங்கியது. பின்னர் ஒருவழியாக விமானம் டெல்லியில் தரையிறங்கியது.
இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் விமானத்தில் பயணம் செய்த சுமார் 24 பேருக்கு காயங்கள் ஏற்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், விமானத்தின் தலைமை விமானி(pilot-in-command), பணியின்போது போதைப்பொருள் பயன்படுத்தி உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா(ஏ.ஐ.) எக்ஸ்பிரஸ் ஆகிய 2 நிறுவனங்களில் பணிபுரியும் விமானிகள் அனைவருக்கும் போதை மருந்து பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. டாடா குழுமத்திற்கு சொந்தமான இந்த 2 நிறுவனங்களிலும் சுமார் 5 ஆயிரம் விமானிகள் பணிபுரிந்து வருகின்றனர். அனைத்து விமானிகளும் போதை மருந்து பரிசோதனையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.