புதுடெல்லி,
இந்திய மாலுமிகளின் மரணம் தொடர்பாக அமெரிக்காவை விமர்சித்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், வாஷிங்டனின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் வருத்தமோ இரங்கலோ வெளிப்படுத்தப்படவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
அப்பாவி இந்திய உயிர்களின் இழப்பிற்கு சிறிதும் வருத்தமோ இரங்கலோ வெளிப்படுத்தாத இந்த அதிகாரப்பூர்வ அமெரிக்க அறிக்கையைப் படிப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஒரு "நண்பனும்" மூலோபாய கூட்டாளியுமான நாடு எப்படி இவ்வளவு உணர்ச்சியற்றதாக இருக்க முடியும்?
விதிமுறைகளைப் பின்பற்றாத ஒரு வர்த்தகக் கப்பலை, உயிரிழப்பை ஏற்படுத்தாத பிற வழிகளில் ஏன் தடுத்திருக்க முடியாது? பொதுமக்களான மாலுமிகளை கொல்லும் நோக்கில் ஏவுகணைகளைச் செலுத்தாமல், ஒரு கப்பலின் உந்துவிசையையோ அல்லது திசை திருப்பும் அமைப்பையோ செயலிழக்க செய்ய முடியாதா?
இந்த முக்கியமான கடற்பரப்பில் பயணிக்கும் ஏறக்குறைய ஒவ்வொரு வர்த்தகக் கப்பலிலும் இந்திய மாலுமிகளே உள்ளனர். அவர்கள் அனைவரும் இப்போது அமெரிக்க ஏவுகணைகளுக்கு இலக்காகிறார்களா?
இந்த கொடூர அணுகுமுறை ஏற்றுக்கொள்ள முடியாதது. இதை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ அவர்களிடம் கூறியிருப்பார் என நம்புகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.