தேசிய செய்திகள்

சுயசரிதை புத்தகத்தில் அவதூறு: சோனியா காந்திக்கு சாவர்க்கர் பேரன் நோட்டீஸ்

சோனியா காந்தி எழுதிய சுயசரிதை புத்தகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கர் குறித்து தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறி, அவரது கொள்ளுப்பேரன் சத்யகி சாவர்க்கர் சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, தனது சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் வீர சாவர்க்கர் குறித்து இடம்பெற்றுள்ள கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது கொள்ளுப்பேரன் சத்யகி சாவர்க்கர் சார்பில் வக்கீல் சங்க்ராம் கோலத்கர் சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சோனியா காந்தியின் புத்தகத்தில் 201-வது மற்றும் 443-வது பக்கங்களில் சாவர்க்கர் குறித்து இடம்பெற்றுள்ள கருத்துகள் உண்மைக்கு புறம்பானவை என்றும், வரலாற்றை தவறாக சித்தரிப்பதாகவும் சட்ட நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருணை மனு ளை எழுதியதாக

201-வது பக்கத்தில், காங்கிரஸ் சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆங்கிலேயர்களால் தாக்குதல்களையும் சிறை தண்டனைகளையும் எதிர்கொண்டபோது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் கருணை மனுக்களை எழுதியதாகவும், அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் ஆங்கிலேயர்களுக்கு தகவல் தெரிவிப்பவர்களாக செயல்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கருத்து, சாவர்க்கர் மற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிராக ஆங்கிலேயர்களுக்கு தகவல் தெரிவித்தார் அல்லது அவர்களுடன் இணைந்து செயல்பட்டார் என்ற தவறான பிம்பத்தை ஏற்படுத்துவதாக நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தமான் சிறை

அதேபோல், 443-வது பக்கத்தில் சாவர்க்கரின் இந்துத்துவ கொள்கை குறித்து இடம்பெற்றுள்ள கருத்துகளும் அவரது அரசியல் சிந்தனையை மிகைப்படுத்தி தவறாக சித்தரிப்பதாக கூறப்பட்டுள்ளது. சாவர்க்கர் நீண்டகாலம் ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அந்தமான் சிறையில் அவர் அனுபவித்த துன்பங்கள் மற்றும் அவரது அரசியல் செயல்பாடுகளின் வரலாற்று பின்னணியை கருத்தில் கொள்ளாமல் கருணை மனுக்கள் குறித்து குறிப்பிடுவது முழுமையற்ற தகவலாகும் என்றும் நோட்டீசில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

15 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க கோரிக்கை

மேலும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் சாவர்க்கருக்கு சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டதையும், சாவர்க்கர் தேசிய நினைவகத்துக்கு இந்திரா காந்தி தனது சொந்த வங்கிக் கணக்கில் இருந்து ரூ.11 ஆயிரம் நன்கொடை வழங்கியதையும் சட்ட நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் அல்லது அவற்றில் உள்ள தவறுகளை ஒப்புக்கொண்டு திருத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

மேலும், சோனியா காந்தி எழுத்துப்பூர்வமாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும், பொதுவெளியில் விளக்கம் அளிக்க வேண்டும், அடுத்த பதிப்புகளில் சர்ச்சைக்குரிய கருத்துகளை நீக்கவோ அல்லது திருத்தவோ வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்த கோரிக்கைகளை சட்ட நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்றும், தவறினால் உரிய நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சத்யகி சாவர்க்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

SCROLL FOR NEXT