தேசிய செய்திகள்

அமலாக்கத்துறை சோதனை: “ராகுல் காந்தியின் விருப்பம் நிறைவேறிவிட்டது..” - பினராயி விஜயன் காட்டம்

ராகுல் காந்தி போன்றவர்கள் தன் வீட்டில் எப்போது சோதனை நடக்கும் என ஆவலோடு காத்திருந்ததாக பினராயி விஜயன் தெரிவித்தார்.

திருவனந்தபுரம்,

சி.எம்.ஆர்.எல். நிறுவன ஊழல் வழக்கு தொடர்பாக, கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயனின் வீடு உள்பட, கேரளாவில் உள்ள 10 இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பினராயி விஜயன், “நீண்ட காலமாக அமலாக்கத்துறை என் வீட்டில் சோதனை நடத்த விரும்பியது. இந்த சோதனை சிலருக்கு, குறிப்பாக ராகுல் காந்தி போன்றவர்களுக்கு, பெரும் திருப்தியை அளிக்கும் என்று நான் உணர்கிறேன்.

பினராயி விஜயனின் வீட்டில் ஏன் சோதனை நடத்தப்படவில்லை? ஏன் அவர் கைது செய்யப்படவில்லை? என்பதே ராகுல் காந்தி எழுப்பிய கேள்வி. பா.ஜ.க. அரசு நாட்டில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது எப்போதும் திட்டமிட்ட தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு எதிராக நாடு முழுவதும் வலுவான போராட்டங்கள் எழுந்துள்ளன.

தங்கள் கட்சியைத் தவிர மற்ற கட்சிகள் மீதான அமலாக்கத்துறையின் இந்தத் தலையீடு தொடர வேண்டும் என்பதே காங்கிரசின் நிலைப்பாடு. இவை எதுவும் எங்களை அழித்துவிடப் போவதில்லை. இதை நாங்கள் ஒரு தொடக்கமாக மட்டுமே பார்க்கிறோம். இதுபோன்ற நடவடிக்கைகள் எங்களை முற்றிலுமாக அழித்துவிடும் என்று யாரும் நினைக்கக் கூடாது. உள்ளூர் மக்கள் மற்றும் கட்சித் தோழர்களின் உணர்வுகள் இங்கே வெளிப்படுத்தப்பட்டன.

எதிரிகள் என்னைத் தாக்கத் தயாரான போதெல்லாம், கட்சியின் வலுவான ஆதரவுதான் எனக்குக் கிடைத்தது. அந்த ஆதரவில் எந்தக் குறைவும் இல்லை என்பதைத்தான் தோழர்கள் இன்று நிரூபித்துள்ளனர். இதுதான் நமது பலம். எதையும் எதிர்கொள்ள நாம் ஒன்றிணைவோம்” என்று தெரிவித்தார்.

முன்னதாக கேரள முன்னாள் முதல்-மந்திரி பினராயி விஜயன் வீட்டில் சோதனை முடித்து புறபட்ட அமலாக்கத்துறை வாகனம் மீது சி.பி.எம். கட்சி தொண்டர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தியதால் அங்கு பரபரப்பு நிலவியது.