புதுடெல்லி
டெல்லியில் 1,777 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு உறுதியான நிலையில், முக கவசம் அணிய அரசு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
டெல்லியில் சமீப வாரங்களாக பன்றி காய்ச்சல் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், டெல்லி அரசு பொது சுகாதார எச்சரிக்கையை அறிவித்துள்ளது. பொதுமக்கள் அனைவரும், அடிப்படை சுவாச சுகாதார நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
இதன்படி, மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளில் முக கவசம் அணியும்படியும், அடிக்கடி கைகளை நன்றாக கழுவும்படியும், சுவாச தொற்றுகள் கொண்டவர்களிடம் அதிக நெருக்கம் காட்ட வேண்டாம் என்றும் காய்ச்சல் அறிகுறிகள் கடுமையாக தென்பட்டால் அல்லது தொடர்ந்து காணப்பட்டால் மருத்துவரை அணுகும்படியும் கேட்டு கொண்டுள்ளது.
டெல்லியில் இதுவரை 1,777 பேருக்கு பன்றி காய்ச்சல் தொற்று பதிவாகி உள்ளது. இதுதவிர, 2,300 பேருக்கும் கூடுதலானோருக்கு இன்புளூயன்சா-ஏ பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.
கடந்த வருடங்களிலும் இதே காலகட்டத்தில் டெல்லி, மராட்டியம் உள்பட பல்வேறு மாநிலங்களின் பல பகுதிகளில் பன்றி காய்ச்சல் பரவல் ஏற்பட்டு இருந்தது.