புதுடெல்லி
தெற்கு டெல்லி பகுதியின் சாகித் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே சயீதுலாஜாப் என்ற இடத்தில் 5 மாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இதில், 3-வது தளத்தில் கட்டுமான பணி நடந்து வந்தது. இந்த கட்டிடத்தில் பயிற்சி மையம், ஒன்று, காபி நிலையம் மற்றும் அலுவலகங்களும் செயல்பட்டு வந்துள்ளன.
இந்த நிலையில், நேற்றிரவு 7.44 மணியளவில் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்து மெஹ்ராவ்லி காவல் நிலைய போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். உள்ளூர்வாசிகளும் அவர்களுக்கு உதவியாக செயல்பட்டனர்.
இதில் முதல்கட்டத்தில் நேற்றிரவு வரை 4 பேர் மீட்கப்பட்டனர். நள்ளிரவிலும் மீட்பு பணி தொடர்ந்தது. பின்னர் 5 பேர் என மொத்தம் 9 பேர் வரை மீட்கப்பட்டு உள்ளனர். எனினும், 2 பேர் உயிரிழந்து இருக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பழைய கட்டிடம் என கூறப்படுகிறது. தொடர்ந்து இன்று 2-வது நாளாக மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
இடிபாடுகளில் 6 பேர் இன்றும் சிக்கியிருக்க கூடும் என்று போலீசார் தெரிவித்தனர். அவர்களை மீட்கும் பணியில் டெல்லி போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படை, மாவட்ட பேரிடர் மேலாண்மை வாரியம் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணிகளை விரைப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி ரேகா குப்தா உத்தரவிட்டு உள்ளார்.