ரூ.150 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் 
தேசிய செய்திகள்

டெல்லி விமான நிலையம்: பேங்காக்கிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.150 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

120 சுருள்களுக்குள் 148.67 கிலோ எடை கொண்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தி வரப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

புதுடெல்லி,

புதுடெல்லி விமான நிலையத்தில் ரூ.150 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது. பேங்காக் நகரில் இருந்து வந்த சரக்குகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தபோது, ரூ.150 கோடி மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

விமான நிலையத்தில் சோதனை

புதுடெல்லி விமான நிலையத்தின் சரக்கு வளாக இறக்குமதி பிரிவை சேர்ந்த சிறப்பு விசாரணை மற்றும் புலனாய்வுப் பிரிவு சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், பேங்காக் நகரிலிருந்து வந்த ஒரு குறிப்பிட்ட சரக்கை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தினர். இறக்குமதியாளரின் பிரதிநிதி முன்னிலையில், சந்தேகத்திற்குரிய அந்த சரக்குகள் பிரிக்கப்பட்டு சோதனையிடப்பட்டன.

குழாய்களுக்குள் கஞ்சா சுருள்கள்

அப்போது, அங்கிருந்த 15 அட்டைப்பெட்டிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் இருந்த பாலியூரித்தேன் குழாய்கள் சுற்றப்பட்ட சுருள்களை வெட்டி பார்த்தபோது அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அந்த குழாய்களுக்குள் பச்சை நிறத்திலான போதைப்பொருள் பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. முதற்கட்ட சோதனையில், அது நவீன தொழில்நுட்பமான ஹைட்ரோபோனிக் (மண்ணில்லாமல் நீர் மூலம்) முறையில் வளர்க்கப்பட்ட கஞ்சா என்பது உறுதி செய்யப்பட்டது. மொத்தம் 120 சுருள்களுக்குள் 148.67 கிலோ எடை கொண்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தி வரப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

ரூ.150 கோடி போதைப்பொருள்

கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருட்களின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.52 கோடி ஆகும். எனினும், இந்தியாவில் இதன் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 150 கோடி ரூபாய் இருக்கும் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது

இந்த போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக, சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து, போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டு, குற்றவியல் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

SCROLL FOR NEXT