தேசிய செய்திகள்

அரசு ஊழியர்கள் வாரத்திற்கு 2 நாட்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற டெல்லி அரசு உத்தரவு

திங்கள் கிழமை தோறும் மெட்ரோ திங்கள் தினமாக கடைபிடிக்கப்படும் என்று டெல்லி முதல் மந்திரி ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மேற்காசிய போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை சமாளிக்கும் விதமாக சிக்கன நடவடிக்கைகளை கடைபிடிக்க பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துமாறு நாட்டு மக்களை கேட்டுக்கொண்டிருந்தார். அதேபோல், நிறுவனங்கள் கொரோனா காலத்தைப் போல வீட்டில் இருந்தே பணியாற்றும் முறையை வழங்கலாம் எனவும் யோசனையை முன்வைத்தார். பிரதமர் மோடியின் அறிவுறுத்தலை ஏற்று பாஜக ஆளும் மாநில அரசுகளும் சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

அந்த வகையில், டெல்லியில் அரசு ஊழியர்களுக்கு வாரத்திற்கு 2 நாட்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற மாநில முதல் மந்திரி ரேகா குப்தா அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். அரசை பின்பற்றி தனியார் நிறுவனங்களும் வீட்டில் இருந்து வேலை செய்யும் வசதியை வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், “எனது பாரதம், எனது பங்களிப்பு” என்ற புதிய பிரசார திட்டத்தையும் அறிவித்துள்ளார். திங்கட்கிழமை தோறும் “மெட்ரோ திங்கள்” தினமாக கடைபிடிக்கப்படும் எனவும், அன்றைய தினம் அமைச்சர்கள், அதிகாரிகள் வாகனங்களை தவிர்த்து மெட்ரோ ரயிலில் அலுவலகத்துக்கு வர வேண்டும் என்றும் கூறியுள்ளார். எரிபொருள் சிக்கனம் மற்றும் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு இந்த மாற்றங்கள் அமலுக்கு வருவதாக ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT