நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தொகுதி மறுவரையறை மற்றும் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா ஆகியவை மீண்டும் தாக்கல் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் இன்று இந்தியா கூட்டணி கூட்டம் நடைபெறுகிறது. மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சமீபத்தில் நடந்து முடிந்த பேரவைத் தேர்தல்களில் சில முக்கிய கூட்டணிக் கட்சிகள் பின்னடைவை சந்தித்தன. இந்த பின்னடைவுகள் மற்றும் கூட்டணிக்குள் அதிகரித்து வரும் மனக்கசப்புகளுக்கு மத்தியில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டணி மாறியதை கடுமையாக விமர்சித்த திமுக, இன்றைய கூட்டத்தை புறக்கணித்துள்ளது.
இதனிடையே, ராகுல் காந்தியை விமர்சித்து டெல்லியில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பேனர்களில் உதயநிதி ஸ்டாலின்,மம்தா பானர்ஜி, சரத் பவார் ஆகியோரின் படங்கள் இடம் பெற்றுள்ளன. 20 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் எங்கள் முதுகில் அமர்ந்து முன்னேறிக்கொண்டு இருந்தது . அதன்பிறகு எங்கள் முதுகில் குத்தியது என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.