தேசிய செய்திகள்

மதுபான கொள்கை வழக்கில் கைதான கவிதாவிற்கு அமலாக்கத்துறை காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு

இதற்கு முன்னதாக கவிதா 7 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

புதுடெல்லி,

தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகளும், தெலுங்கானா மேலவை உறுப்பினருமான கவிதாவின் வீட்டில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சேர்ந்து சோதனை நடத்தினர். அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 16ம் தேதி டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோர்ட்டில் இந்த வழக்கை எதிர்த்து போராடுவோம் என்று தெரிவித்தார்.

இதனைதொடர்ந்து கவிதாவை வரும் 23ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி கோர்ட்டு நீதிபதி எம்.கே. நாக்பால் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, டெல்லி மதுபான கொள்கை முறைகேடு விவகாரம் தொடர்பான பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கவிதா சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது கவிதாவிற்கு ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது. மேலும் விசாரணை கோர்ட்டை அணுகுமாறு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.

இந்நிலையில், கவிதாவின் அமலாக்கத்துறை காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், அவரை டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது வழக்கு விசாரணைக்கு மேலும் 5 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, கவிதாவின் அமலாக்கத்துறை காவலை மேலும் 3 நாட்கள் நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இந்த வழக்கில் கவிதாவுக்கு வரும் 26ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கவிதா 7 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT