தேசிய செய்திகள்

டெல்லி: நகை, பணம் உள்ளிட்ட ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்த கும்பல் கைது

இரவு நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து, நகை, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து விட்டு ஏற்கனவே திட்டமிட்ட பகுதிகளுக்கு தப்பி சென்று விடுவர் என போலீசார் தெரிவித்தனர்.

புதுடெல்லி

டெல்லியில் பல நாட்களாக திட்டமிட்டு வீட்டில் இருந்து நகை, பணம் உள்ளிட்ட ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியின் மது விகார் நகரில் ஆர்யா நகர் குடியிருப்பில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது என போலீசாருக்கு புகார் வந்தது. இதனை தொடர்ந்து டெல்லி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். எனினும், எந்தவித தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.

ஏறக்குறைய சம்பவ பகுதியில் இருந்து 10 கி.மீ. தொலைவு வரையில் 150 சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை செய்தனர்.

இதில், பப்லூ என்ற கலுவா மற்றும் ராம்பால் என்ற ராம்குமார் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடந்த விசாரணையில், விஷால் என்ற விக்கு என்ற மற்றொரு நபர் கைது செய்யப்பட்டனர்.

இதன்பின்னர், பொற்கொல்லரான ரவி சோனி மற்றும் அவ கூட்டாளி பிங்கி ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடந்த விசாரணையில், அவர்கள் கொள்ளையடித்த பொருட்களில் ஒரு பெரும் பகுதியை போலீசார் கைப்பற்றினர்.

எனினும், நகைகள் பலவற்றை அவர்கள் குடும்பத்தினர், கூட்டாளிகளிடம் கொடுத்து மறைத்து வைத்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கொள்ளையடித்த நகை, பணம் உள்ளிட்ட பொருட்களின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என போலீசார் கூறினர்.

இந்த கும்பல் பகல் நேரங்களில் பூட்டியிருக்கும் வீடுகளை கண்காணித்து வருவர். இதன் பின்னர், இரவு நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து, நகை, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து விட்டு ஏற்கனவே திட்டமிட்ட பகுதிகளுக்கு தப்பி சென்று விடுவர் என போலீசார் தெரிவித்தனர்.