புதுடெல்லி,
டெல்லி ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் “வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்காத காரணத்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கள்ளச்சந்தையில் ரூ.5 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.
இது மத்திய அரசு தனது கடமையை நிறைவேற்றுவதில் தவறிவிட்டது என்பதையே காட்டுகிறது. சமையல் எரிவாயு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். இந்த சூழலை கண்காணிக்க ஒரு நீதித்துறை விசாரணை குழுவை அமைக்க வேண்டும்" என கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரிக்க மறுத்து ஐகோர்ட்டு வெளியிட்ட உத்தரவில் "சமையல் எரிவாயு வினியோகம் தொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ள நிலையில், நாங்கள் பயனற்ற வழிகாட்டுதல்களை பிறப்பிக்க போவதில்லை.
நாங்களா அரசை நடத்துகிறோம்? இது போன்ற விஷயங்களில் நாங்கள் தலையிடுவது இல்லை. இந்தியாவின் பொருளாதார கொள்கைகளை எங்களால் தீர்மானிக்க இயலாது" என கூறி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மனுதாரர் அணுக அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தது.