புதுடெல்லி,
போலீஸ் நோட்டீசுக்கு எதிரான நேஹா போரா மனு மீது டெல்லி ஐகோர்ட்டு இன்று உத்தரவு பிறப்பிக்கிறது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களில் அகில இந்திய மாணவர் சங்க தலைவர் நேஹா போரா தீவிரமாக இருக்கிறார்.
அவருக்கு கடந்த 17-ந் தேதி டெல்லி போலீசார் ஒரு நோட்டீஸ் அனுப்பினர். அதில், சிறப்பு நிர்வாக மாஜிஸ்திரேட் முன்பு ஆஜராகி, விசாரணை காலத்தில் அமைதியை பேணுவதாக ரூ.10 ஆயிரத்துக்கான பிணைப்பத்திரத்தை சமர்ப்பிக்குமாறு போலீசார் கூறியிருந்தனர்.
இந்த நோட்டீசை ரத்து செய்யுமாறும், தனக்கு எதிராக எந்த பலவந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று போலீசுக்கு உத்தரவிடுமாறும் கோரி, டெல்லி ஐகோர்ட்டில் நேகா போரா மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் முன்பு நேற்று விசாரணை நடந்தது. இருதரப்பு வாதங்களுக்கு பிறகு, 23-ந் தேதி (இன்று) மாலை 6 மணிக்கு உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி கூறினார்.
முன்னதாக நேஹா போரா மற்றும் காவல்துறையின் வழக்குரைஞர்களின் வாதங்களை சுமார் மூன்று மணி நேரம் கேட்ட நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், மனு மீதான உத்தரவை ஒத்திவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.