டெல்லி,
டெல்லியில் பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு, 2 நாட்கள் மட்டுமே சான்றளிக்கப்பட்ட பசுமைப் பட்டாசுகளை வெடிக்க ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.
காற்று மாசுபாடு மிக அதிகமாகப் பதிவாகும் இடமாக தலைநகர் டெல்லி விளங்குகிறது. இதனால் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய 2 நாட்களுக்கு மட்டும் பசுமைப் பட்டாசுகளை வெடிக்க ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் பி.பி. வராலே ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
குறிப்பிட்ட இந்த 2 நாட்களிலும் பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் பட்டாசு வெடிக்க முடியாது. காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் மட்டுமே சான்றளிக்கப்பட்ட பசுமைப் பட்டாசுகளை வெடிக்க ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.
ஐகோர்ட் வழங்கிய இந்த 2 நாள் சலுகை முடிந்தவுடன், நவம்பர் 9-ம் தேதி முதல் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசுகளுக்கான முழுமையான தடை மீண்டும் அமலுக்கு வரும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆஸ்பத்திரிகள், முதியோர் இல்லங்கள், நர்சிங் ஹோம்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அமைதிப் பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்களிலிருந்து 300 மீட்டர் சுற்றளவுக்குள் பட்டாசு வெடிக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகள் 'பட்டாசு இல்லா மண்டலங்களாக' கண்காணிக்கப்படும்.
பட்டாசு தயாரிப்பாளர்கள் மற்றும் வணிகர்கள் உரிய விதிகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்ய, அவர்களிடம் பாதுகாப்பு வைப்புத்தொகை பெற ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. விதிகளை மீறிச் செயல்பட்டால் இந்த தொகை உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் ஆகிய இரண்டையும் சமநிலைப்படுத்தும் நோக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.