தேசிய செய்திகள்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் கணக்கு மீதான தடையை நீக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

அரசின் தடையை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அக்கட்சி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

புதுடெல்லி,

வேலையில்லாத இளைஞர்களை கரப்பான்பூச்சி என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறியநிலையில் ஆம் ஆத்மி கட்சியில் பணியாற்றியவரும், அமெரிக்காவின் போஸ்டன் பல்கலைக்கழக மாணவருமான அபிஜித் தீப்கே, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற நையாண்டி கட்சியை தொடங்கினார். அதில் பல ஆயிரக்கணக்கானோர் உறுப்பினர்களாகினர். அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் லட்சக்கணக்கானோர் இணைந்தனர். இதுநாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மத்திய அரசுக்கு எதிராவும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக இக்கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கிடையே, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் தள பக்கத்தை மத்திய அரசு முடக்கியது. அரசின் தடையை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அக்கட்சி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி சுவர்னா காந்தா ஷர்மா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், “நீட் மறுதேர்வை கருத்தில் கொண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த கூடாது என்பதற்காக கணக்கு முடக்கப்பட்டதாகவும் தற்போது தேர்வு முடிவடைந்ததால் இனி கணக்கை மீட்டெடுக்க தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும் தெரிவித்தார். இதை கருத்தில் கொண்ட நீதிபதி ஷர்மா, கட்சியின் எக்ஸ் தளம் மீதான தடையை நீக்கி உத்தரவிட்டார்.