தேசிய செய்திகள்

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்திற்கு தடை விதிக்க டெல்லி ஐகோர்ட் மறுப்பு

போராட்டத்தைக் கட்டுப்படுத்தவும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக டெல்லி போலீசார் அளித்த உறுதியைப் பதிவு செய்துகொண்டது.

புதுடெல்லி: டெல்லி கனாட் பிளேஸ் பகுதியில் நாளை நடைபெற உள்ள கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்துக்கு தடை விதிக்க டெல்லி ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. அதே நேரத்தில், போராட்டத்தைக் கட்டுப்படுத்தி, சட்டப்படி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக போலீசார் அளித்த உறுதியை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே, டெல்லி கனாட் பிளேஸ் பகுதியில் உள்ள சென்ட்ரல் பார்க் பகுதியில் தேசியக் கொடியுடன் திரண்டு போராட்டம் நடத்துமாறு அழைப்பு விடுத்திருந்தார். தேர்தல் முறைகேடுகள் தொடர்பாகக் குரல் எழுப்பிய போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்ததைக் கண்டித்து இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தால் வணிகர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி, கனாட் பிளேஸ் பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி நிதின் வாசுதேவ் சாம்ப்ரே மற்றும் நீதிபதி சஞ்சய் சர்மா அடங்கிய அமர்வு, போராட்டத்துக்குத் தடை விதிக்க மறுத்தது.

மேலும், போராட்டத்தைக் கட்டுப்படுத்தவும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக டெல்லி போலீசார் அளித்த உறுதியைப் பதிவு செய்துகொண்டது.

இதற்கிடையே, நிர்வாகக் காரணங்களுக்காக அக்டோபர் 16 மற்றும் 17-ந்தேதிகளில் சென்ட்ரல் பார்க் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மூடப்பட்டிருக்கும் என புதுடெல்லி மாநகராட்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT