வருமான வரி நோட்டீஸ் 
தேசிய செய்திகள்

டெல்லி: ரூ.12.6 லட்சம் சம்பளம் வாங்கும் ஊழியருக்கு ரூ.9.2 கோடி வருமான வரி நோட்டீஸ்!

போலி நிறுவனங்களைத் தொடங்கி வங்கி கணக்குகளைக் கையாண்ட மோசடி கும்பலைப் பிடிக்க தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

ஆண்டுக்கு ரூ.12.6 லட்சம் சம்பளம் வாங்கும் தனியார் டெலிகாம் நிறுவன ஊழியர் ஒருவருக்கு, ரூ.9.2 கோடி மதிப்பிலான கணக்கில் காட்டப்படாத வருமானம் குறித்து வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது பான் கார்டு (PAN card) மற்றும் கேஒய்சி (KYC) ஆவணங்களைத் திருடிய மோசடி கும்பல், போலி நிறுவனங்களைத் தொடங்கி கோடிக்கணக்கில் வர்த்தகம் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

வருமான வரித்துறை நோட்டீஸ்

புதுடெல்லியில் உள்ள ஒரு டெலிகாம் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஒரு ஊழியருக்கு, கடந்த செப்டம்பர் 9-ம் தேதி வருமான வரித்துறையிடமிருந்து ஒரு நோட்டீஸ் வந்தது. ஆகஸ்ட் 20-ம் தேதி தயாரிக்கப்பட்ட அந்த நோட்டீஸில், 2019-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே ஆகிய 2 மாதங்களில் மட்டும் ரூ.6.5 கோடி மதிப்பிலான வர்த்தகப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாகவும், மொத்தம் ரூ.9.2 கோடி கணக்கில் காட்டப்படாத வருமானத்திற்கு விளக்கம் அளிக்குமாறும் கூறப்பட்டிருந்தது.

மேலும், இந்த நோட்டீஸ் உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள ஒரு முகவரிக்கு அனுப்பப்பட்டிருந்தது. அந்த வீட்டைப் பாதிக்கப்பட்ட நபர் கடந்த 2013-ம் ஆண்டே காலி செய்துவிட்ட நிலையில், பழைய முகவரி மூலமாகவே இந்த விவரம் அவருக்குத் தெரியவந்துள்ளது.

மோசடி நடந்தது எப்படி?

இது குறித்து அதிர்ச்சியடைந்த அந்த ஊழியர் விசாரித்தபோது, தனது பான் கார்டு மற்றும் கேஒய்சி ஆவணங்களைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் டெல்லியில் 2 போலி ஜிஎஸ்டி பதிவுகளைப் பெற்றிருப்பது தெரியவந்தது. அந்த போலி நிறுவனங்களின் பெயரில் வங்கிக் கணக்குகளைத் தொடங்கிய மோசடியாளர்கள், 2019-ம் ஆண்டு 2 மாதங்களில் மட்டும் ரூ.6.5 கோடிக்குப் பரிவர்த்தனை செய்துள்ளனர்.

போலீசார் நடவடிக்கை

தனக்குத் தெரியாமலேயே தனது அடையாள ஆவணங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு மோசடி நடந்திருப்பது குறித்து பாதிக்கப்பட்ட ஊழியர் டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

இப்புகாரின் அடிப்படையில், கடந்த நவம்பர் 3-ம் தேதி டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். போலி நிறுவனங்களைத் தொடங்கி வங்கிக் கணக்குகளைக் கையாண்ட மோசடி கும்பலைப் பிடிக்க தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT