டெல்லி,
டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக செயல்பட்டு சில முடிவுகளை எடுத்துள்ளதாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) உள்பட பல்வேறு கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. மேலும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் இன்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அஹிஜித் தீப்கே மற்றும் முக்கிய நிர்வாகிகள் போராட்டத்தில் பங்கேற்பதற்குமுன்பே போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல், சிஜேபி போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவரும் கேரள முன்னாள் முதல்-மந்திரியுமான பினராயி விஜயன் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் போலீசாரால் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, சிஜேபி போராட்டம் காரணமாக டெல்லியில் ரெயில், மெட்ரோ, சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.