தேசிய செய்திகள்

டெல்லி ஆர்ப்பாட்டம்: 980 பேர் பல்வேறு குற்ற பின்னணி கொண்டவர்கள்; அதிர்ச்சி தகவல்

61 பேர் பாலியல் வன்கொடுமை, 25 பேர் பெண்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் ஆவர்.

புதுடெல்லி

டெல்லி போராட்டத்தின்போது, அந்த பகுதியில், குற்ற பின்னணி கொண்ட 980 பேர் சுற்றி திரிந்தனர் என போலீசார் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.

டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில், நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக கடந்த 20-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 2,873 பேரை பிடித்து போலீசார் விசாரித்து உள்ளனர். இதில், அவர்களில் 980 பேர் குற்ற பின்னணி கொண்டவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.

கொலை, கொள்ளை வழக்குகள்

அவர்களில் 101 பேர் கொலை வழக்குகளிலும், 62 பேர் கொலை முயற்சி வழக்குகளிலும், 284 பேர் கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளிலும், 229 பேர் ஆயுத சட்டம் வழக்குகளிலும், 135 பேர் செயின் பறிப்பு வழக்குகளிலும், 19 பேர் கடத்தல் வழக்குகளிலும், 67 பேர் போதைப்பொருள் வழக்குகளிலும் தொடர்புடையவர்கள் என போலீசார் நடத்திய விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

இவர்களில் 61 பேர் பாலியல் வன்கொடுமை வழக்குகளிலும், 25 பேர் பெண்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட வழக்குகளிலும், 6 பேர் போக்சோ வழக்குகளிலும் தொடர்புடையவர்கள் ஆவர்.

கடந்த 20-ந்தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் 65 ஆர்ப்பாட்டக்காரர்களும், 200-க்கும் மேற்பட்ட போலீசாரும் காயமடைந்தனர் என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.