புதுடெல்லி
டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம் நடத்த உள்ள நிலையில், பாதுகாப்பிற்காக 25 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி (எஸ்.ஐ.ஆர்.) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ஒவ்வொரு மாநிலத்திலும் லட்சக்கணக்கான பேரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளன. உரிய முறைகளின்படியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
எனினும், இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார், மற்ற இரு ஆணையாளர்களின் ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாமல் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில் தன்னிச்சையாக செயல்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து அவர் பதவி விலகக்கோரி, பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் காந்தி ஜெயந்தி அன்று ஆம் ஆத்மி கட்சியும், இந்திய மாணவர் சங்கம், இந்திய தேசிய மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் சங்கம் போன்ற மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதேபோன்று சமீபத்தில், மராட்டியத்தின் மும்பை சிவாஜி பார்க்கில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் பிரமாண்ட போராட்டம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் அக்கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். எனினும், போலீசார் இதற்கு அனுமதி மறுத்துள்ளனர்.
இதில், இளைஞர்கள் பங்கேற்பதை தடுப்பதற்காக, நேற்று இரவு 9 மணி முதல் இன்று வரை, டெல்லியில் 57 மெட்ரோ ரெயில் நிலையங்களை மூட மெட்ரோ நிர்வாகத்துக்கு டெல்லி போலீசார் கடிதம் எழுதி உள்ளனர். மேலும், நாடு முழுவதும் இருந்து டெல்லிக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்தி வைக்கப்படும் என கூறப்படுகிறது.
போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ள சூழலில், தடையை மீற வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர். வன்முறை எதுவும் பரவாமல் தடுப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், எல்லை பாதுகாப்பு படையினர், டெல்லி காவல் துறையினர் என ஏறக்குறைய 25 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இரவோடு இரவாக 100-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியை ஒட்டிய பிற மாநில எல்லை பகுதிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.