தேசிய செய்திகள்

டெல்லி பேரணி: தீபாவளி வியாபாரம் பாதிக்கும் என ராகுல் காந்திக்கு மீண்டும் கடிதம்

20 சந்தைகளின் வர்த்தகர்களுக்கு 20 நிமிடம் ஒதுக்குங்கள். இதுவே, ஜனநாயகத்திற்கு அழகு என தெரிவித்து உள்ளனர்.

புதுடெல்லி

டெல்லி பேரணியால் தீபாவளி வியாபாரம் பாதிக்கும் என ராகுல் காந்திக்கு மீண்டும் கடிதம் எழுதப்பட்டு உள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார் பதவி விலகல் தொடர்பாக இந்தியா கூட்டணியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி ஜந்தர் மந்தரில் காந்தி ஜெயந்தி அன்று ஆம் ஆத்மி கட்சியும், இந்திய மாணவர் சங்கம், இந்திய தேசிய மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் சங்கம் போன்ற மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தின. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பிலும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு தடை

இந்த நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. அதற்கு பதிலாக ராம்லீலா மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டது.

தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் சூழலில், அதுவரை எந்த போராட்டமும் இல்லை என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் திப்கே அறிவித்துள்ளார். இந்நிலையில், ராம்லீலா மைதானத்தில் வருகிற 1-ந்தேதி இந்தியா கூட்டணி சார்பில் பிரமாண்ட பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

வியாபாரம் பாதிக்கும்

இதனால் தீபாவளி பண்டிகை வியாபாரம் வெகுவாக பாதிக்கும் என டெல்லி வணிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் தலைவர் பிரிஜேஷ் கோயல், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ஏறக்குறைய 10 லட்சம் பேர் பங்கேற்கும் இப்பேரணியால் 20 முக்கிய சந்தைகளில் கடுமையான வணிக இழப்பு ஏற்படும். எனவே, எங்களது குறைகளை கூற ராகுல் காந்தி 20 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும். பேரணியை தீபாவளிக்கு பிறகு தள்ளி வைக்க வேண்டும் என கோரியுள்ளார்.

சிறு வர்த்தகர்கள்

கடந்த 24-ந்தேதியும் இந்த அமைப்பு, பேரணியை தள்ளி வைக்க கோரி கடிதம் எழுதியது. இந்நிலையில், 2-வது முறையாக நேற்றும் கடிதம் எழுதியுள்ளது. நாங்கள் போராட விரும்பவில்லை. பேச்சுவார்த்தையையே விரும்புகிறோம். சிறு வர்த்தகர்களின் குரலை ராகுல் காந்தி கவனிக்க வேண்டும்.

அதனால் 20 சந்தைகளின் வர்த்தகர்களுக்கு 20 நிமிடம் ஒதுக்குங்கள். இதுவே, ஜனநாயகத்திற்கு அழகு என தெரிவித்து உள்ளனர். எனினும், அரசுக்கு அழுத்தம் கொடுக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT