புதுடெல்லி
டெல்லியில் கடும் மாசுபாட்டால் பொதுமக்கள் தினமும் சுவாச கோளாறு உள்ளிட்ட பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். காற்று மாசை கட்டுப்படுத்த அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக பழைய வாகன பயன்பாட்டுக்கு தடை உள்ளிட்ட பல்வேறு முறைகளை கையாண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது. இதனை தொடர்ந்து, டெல்லி சுற்றுச்சூழல் துறை மந்திரி மன்ஜீந்தர் சிங் சிர்சா மற்றும் போக்குவரத்து துறை மந்திரி டாக்டர் பங்கஜ் குமார் சிங் ஆகியோர் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
டெல்லியில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் முயற்சியாக, பசுமை எரிசக்தியை ஊக்குவிக்கும் வகையில், போக்குவரத்து வசதிகளை அதிகரிக்க அரசு திட்டமிட்டு உள்ளது. இதன்படி, மின்சார டாக்சி சேவையானது டெல்லி செயலகத்தில் இருந்து தொடங்கியது.
இதற்காக ஆயிரம் மின்சார வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. அதனுடன் கிரீன் எஸ்.எம். செயலி ஒன்றும் துவக்கப்பட்டு உள்ளது. இதனை மக்கள் பயன்படுத்தி பயன் பெறலாம். ஓராண்டுக்குள் இந்த எண்ணிக்கையை 10 ஆயிரம் மின்சார வாகனங்களாக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இவை 100 சதவீதம் இந்திய உற்பத்தி வாகனங்கள் ஆகும்.