புதுடெல்லி
டெல்லியில் தொழில் அதிபர் வீடு மீது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பா? என விசாரிக்கப்பட்டு வருகிறது.
டெல்லி பிதாம்புராவில் உள்ள துபாய் தொழிலதிபர் சாஹில் ஜெயின் வீட்டின் மீது நேற்று அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த முகமூடி ஆசாமிகள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் வீட்டின் சுவர்கள் மற்றும் அங்கிருந்த கார் சேதமடைந்தன.
இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவ இடத்தில் இருந்து 6 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொழிலதிபருக்கு கடந்த 2021-ம் ஆண்டு சிறையில் இருக்கும் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கொலை மிரட்டல் விடுத்திருந்தது தெரிய வந்துள்ளது.
இதனால், இந்த துப்பாக்கிச்சூட்டின் பின்னணியில் பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர். தவிர, ரோகித் கொடாரா கும்பலுக்கு உள்ள தொடர்பு பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது.