புதுடெல்லி,
டெல்லியில் அடிக்கடி புழுதிப்புயல் வீசி வருகிறது. இந்த கோடைகாலத்தில் வெயிலின் தாக்கமும் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு பிறகு திடீரென வானம் இருண்டு புழுதிப்புயல் வீசியது. பேரிரைச்சலுடன் வீசிய இந்த காற்றால் புழுதி வானளவு பறந்தது. சில இடங்களில் ஆளையே தூக்கிக் சென்றுவிடும் போல காற்று வீசியது.
டெல்லி பாலம் பகுதியில் மணிக்கு 92 கி.மீ. வேகத்துக்கு சூறைக்காற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த பேய்க்காற்று காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. வெளியே நடமாடியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த புயலைத் தொடர்ந்து சில இடங்களில் கனமழை பெய்தது.