நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நாளை மறுநாள் கூட உள்ளது. இந்தக் கூட்டத்தில் தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இந்த மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பிரகாஷ் ராஜ் கூறியிருப்பதாவது: அவசர அவசரமாக சில திருத்தங்களோடு பாஜக தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வருகிறது. மதம், மொழி, இனம் , சிறுபான்மையினருக்கு, இந்த நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது. இதனை எல்லாருக்கும் உணர்த்திய திமுக, மதவாத சக்திக்கு துணைப் போவது முதுகில் குத்தும் செயல் இல்லையா?இது சுயநலமான முடிவு.. ஒட்டுமொத்தமாக மக்களுக்கு துரோகம் செய்யும் முடிவை ஏற்க முடியாது.
மாநில உரிமைக்கு போராடி இந்தியாவுக்கு வழிகாட்டிய திமுக, வரலாற்று பிழையான முடிவை எடுக்க கூடாது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். உங்களின் இந்த முடிவு அடுத்த தலைமுறையை தீர்மானிக்க போகிறது. இந்த முடிவால் அடுத்த தலைமுறை உங்களை எப்படி பார்க்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.