பருவமழை தொடங்கியிருந்தாலும், இந்தியாவின் பல பகுதிகளில் எதிர்பார்த்த அளவில் மழை பெய்யாதது கவலைக்குரிய சூழலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, செயற்கைக்கோள் படங்களில் வழக்கமாக இந்த காலகட்டத்தில் காணப்படும் அடர்ந்த மழை மேகங்கள் இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாடு முழுவதும் மழைப் பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தாலும், நாட்டின் மத்திய, மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் வழக்கமாக இந்த காலகட்டத்தில் காணப்பட வேண்டிய அடர்ந்த மழை மேகங்கள் தற்போது இல்லாதது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் படங்களில், இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் மேகமின்றி வறண்ட நிலையில் காணப்படுவது பதிவாகியுள்ளது. பருவமழையின் முன்னேற்றம் மந்தமாக இருப்பதையே இந்த காட்சிகள் வெளிப்படுத்துவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பருவமழை எதிர்பார்த்த வேகத்தில் முன்னேறாததால், ஜூன் 4 முதல் ஜூன் 26 வரை இந்தியா முழுவதும் சராசரியாக 45 சதவீத மழைப் பற்றாக்குறை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த மழைப் பற்றாக்குறை விவசாயம், குடிநீர் ஆதாரங்கள், அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அடுத்த சில நாட்களில் பருவமழையின் நகர்வு எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.