தேசிய செய்திகள்

மழை அளவைப் பொருத்து, தமிழகத்துக்குரிய காவிரி நீரை திறக்க கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவு-மசூத் உசைன்

மழை அளவைப் பொருத்து, தமிழகத்துக்குரிய காவிரி நீரை திறக்க கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது என காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் மசூத் உசைன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி

தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர் விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி ஜூன் மாதத் தவணையாக 9.19 டிஎம்சி நீரை வழங்க ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் 2 டிஎம்சி நீர் மட்டுமே வழங்கிய கர்நாடகா, பருவமழையையும், அணைகளில் நீர் இருப்பையும் காரணம் காட்டி வழக்கம்பேல் கையை விரித்தது. மேலும் மேகதாதுவில் அணை கட்டும் பணியில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் டெல்லி சேவா பவனில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4-வது கூட்டம் ஆணைய தலைவர் மசூத் உசைன் தலைமையில் தொடங்கியது. தமிழகம் தரப்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர், காவிரி தொழில்நுட்ப குழு உறுப்பினர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். கர்நாடகா தரப்பில் நீர்வளத்துறை செயலாளர், தலைமை பொறியாளர் ஆகியோர் பங்கேற்று உள்ளனர்.

கூட்டத்திற்கு பின் ஆணைய தலைவர் மசூத் உசைன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

கர்நாடக அணைகளுக்கு மிகக் குறைவான தண்ணீரே வந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மழை அளவைப் பொருத்து, தமிழகத்துக்குரிய காவிரி நீரை திறக்க கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுவரை 1.77 டி.எம்.சி. நீர் கடந்த 24-ம் தேதி வரை திறந்து விடப்பட்டுள்ளது .தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்குரிய தண்ணீரை திறக்க, கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT