தேசிய செய்திகள்

நீட் தேர்வு ரத்தானதால் விரக்தி: மாணவன் தூக்கிட்டு தற்கொலை

நீட் நுழைவுத்தேர்வு கடந்த 3-ந்தேதி நாடு முழுவதும் நடைபெற்றது

ஜெய்ப்பூர்,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு 'நீட்' நுழைவுத்தேர்வு அவசியம். இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.

அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 3-ந்தேதி நாடு முழுவதும் 552 நகரங்களிலும், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் 14 இடங்களிலும் என மொத்தம் 5,432 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். ஆனால், நீட் தேர்வில் முறைகேடு நடந்தது தெரியவந்துள்ளது. தேர்வு நடைபெறுவதற்கு சில நாட்களுக்குமுன்பே ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்துள்ளது. இதையடுத்து 3ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை ரத்து செய்தது. மேலும், நீட் மறுதேர்வு அடுத்த மாதம் 21ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனா மாவட்டம் சிகர் பகுதியை சேர்ந்த 22 வயதான பிரதீப் மெஹ்வால் என்ற மாணவன் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். அவர் தனது சகோதரியுடன் சேர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த நிலையில் கடந்த 3ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை எழுதினார். பிரதீப் மெஹ்வால் நீட் தேர்வை சிறப்பாக எழுதியுள்ளதாகவும், நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்றும் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில், வினாத்தாள் கசிவு காரணமாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு அறிவிக்கப்பட்டது. இதனால் மறுதேர்வு வைத்தால் கடந்த முறை போன்று சிறப்பாக எழுத முடியுமா? நல்ல மதிப்பெண் வருமா? என்று மிகுந்த மன உளைச்சல், விரக்தியில் பிரதீப் மெஹ்வால் இருந்தார். அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று பிரதீப் மெஹ்வாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் விரக்தி, மன உளைச்சல் ஏற்பட்டு மகன் தற்கொலை செய்துகொண்டதாக பிரதீப் மெஹ்வாலின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.