கோடிக்கணக்கான இந்திய குடிமக்களின் வாக்குரிமையை பறித்து, அவர்களை தங்கள் சொந்த நாட்டிலேயே வாக்குரிமை இல்லாத 2-ம் தர குடிமக்களாக மாற்றும் எந்தவொரு நடைமுறையும் அடிப்படையிலேயே தன்னிச்சையானதாகும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் பேசியுள்ளார். அரசியலமைப்பின் அடிப்படையையே அது தாக்குகிறது எனவும், இந்திய அரசியலமைப்பின் கீழ் நாம் ஏற்றுக்கொண்டுள்ள அரசியலமைப்பு ஒழுங்கையே இது மறுப்பதாகும் என கூறியுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள நல்சார் சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 19-வது நல்சார்-நீதிபதி பி.ஆர். சாவ்னி நினைவு நாள் தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சிகளின் நிறைவு விழாவில் நீதிபதி பூயான் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்திய அரசியல் அமைப்பு குடிமக்களில் இரண்டு பிரிவினரை வைக்கவில்லை. வாக்குரிமை பெற்ற குடிமக்கள், வாக்குரிமை இல்லாத குடிமக்கள் என இருவகையாக பிரிவிக்கவில்லை. கோடிக்கணக்கான இந்திய குடிமக்களின் வாக்குரிமையை பறித்து, அவர்களை தங்கள் சொந்த நாட்டிலேயே வாக்குரிமை இல்லாத 2-ம் தர குடிமக்களாக மாற்றும் எந்தவொரு நடைமுறையும் அடிப்படையிலேயே தன்னிச்சையானதாகும்.
எத்தகைய மாற்று வாதங்களாலும் அதை நியாயப்படுத்த முடியாது. அரசியலமைப்பின் அடிப்படையையே அது தாக்குகிறது. அரசியல் அமைப்பின் 14 வது பிரிவு அனைவருக்கு சமத்துவ உரிமையை உறுதி செய்கிறது. சட்டப்பிரிவு 26 வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை வழங்குகிறது. எனவே, அத்தகைய நடவடிக்கைகள் அவற்றுக்கு எதிரானது. இந்திய அரசியலமைப்பின் கீழ் நாம் ஏற்றுக்கொண்டுள்ள அரசியலமைப்பு ஒழுங்கையே இது மறுப்பதாகும் என்று கூட நான் சொல்வேன்.
ஒரு வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் ஒருமுறை இடம்பெற்றுவிட்டால், அந்த நபர் இறந்தவர் என்பதைத் தவிர, உரிய அறிவிப்பு வழங்கி, அவரது தரப்பைக் கேட்காமல் பெயரை நீக்க முடியாது. இந்திய குடிமகனின் வாக்குரிமையையோ அல்லது வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் உரிமையையையோ அவரது குடியுரிமையிலிருந்து பிரிக்க முடியாது. அவ்வாறு பிரிப்பது உடலில் இருந்து ஆன்மாவை அகற்றுவதற்கு சமமாகும்" என்று கூறினார்.