Image Courtesy: @DelhiPolice 
தேசிய செய்திகள்

டெல்லியில் ரூ.897 கோடி மதிப்பிலான 1,450 கிலோ போதைப்பொருட்கள் அழிப்பு

டெல்லியில் 10-வது மாபெரும் போதைப்பொருட்கள் அழிப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

புதுடெல்லி,

டெல்லி ஜி.டி.கர்னால் சாலையில் உள்ள கழிவு அகற்றும் மையத்தில், சிறப்பு காவல் ஆணையர் (குற்றப்பிரிவு) எச்.ஜி.எஸ்.தலிவால் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் முன்னிலையில், 10-வது மாபெரும் போதைப்பொருட்கள் அழிப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.897 கோடி மதிப்பிலான 1,450 கிலோ போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டன.

அழிக்கப்பட்ட போதைப்பொருட்களில் சுமார் 1,010 கிலோ மெத்தாபெட்டமைன், 135 கிலோ ஹெராயின், 62 கிலோ சாரஸ், ​​37 கிலோ கஞ்சா, 16 கிலோ மெத்தாகுவாலோன், 91 கிலோ பாப்பி ஸ்ட்ரா, 70 கிலோ பீனைல்ப்ரோபனோன், 15 லட்சத்திற்கும் அதிகமான ட்ரமாடோல் மாத்திரைகள், 36,000-க்கும் மேற்பட்ட கோடின் சிரப் பாட்டில்கள் மற்றும் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட பிற மனநல பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் ஆகியவை அடங்கும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய அழிப்பு நடவடிக்கையுடன் சேர்த்து, டிசம்பர் 2022 முதல் நடத்தப்பட்ட இதுபோன்ற 10 நடவடிக்கைகளின் மூலம், சர்வதேச சந்தையில் சுமார் ரூ. 14,799 கோடி மதிப்புள்ள 49,663 கிலோ போதைப்பொருட்களை டெல்லி காவல்துறை அழித்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை அழிப்பது மட்டுமின்றி, போதைப்பொருள் கடத்தல் கட்டமைப்பையே தகர்ப்பதுதான் இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என சிறப்பு காவல் ஆணையர் தலிவால் தெரிவித்துள்ளார்.