திருவனந்தபுரம்,
கேரளம் மாநில முன்னாள் முதல்- மந்திரியும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான பினராயி விஜயன், அவரது மகள் வீணா விஜயன் ஆகியோர் மீது லஞ்சப்புகார் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. விசாரணைக்கு பிறகு வீணாவுக்கு சொந்தமான எக்ஸாலாஜிக் சொல்யூ ஷன்ஸ் நிறுவனம் எந்த சேவையும் வழங்காமல் சி.எம்.ஆர்.எல். கனிமவள நிறுவனத்திடம் இருந்து மாதந்தோறும் பணம் பெற்றதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.
மேலும் இந்த விவகாரத்தில் பினராயி விஜயன், அவரது மருமனும், முன்னாள் மந்திரியுமான முகமது ரியாஸ் எம்.எல்.ஏ. ஆகியோருக்கு தொடர்பு உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் விசாரணையில் இருந்தபோது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன்பிறகு கடந்த மே மாதம் 27-ந் தேதி பினராயி விஜயன் மற்றும் முகமது ரியாஸ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது.
அதன் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன், அவரது மகள் வீணா விஜயன் மற்றும் அவரது கணவர் முகமது ரியாஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி கேரளம் மாநில டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது.
அந்த கடிதத்தில் பினராயி விஜயன் வீட்டில் நடத்திய சோதனையில் அவரது மகள் வீணா விஜயனின் ரகசிய டைரி கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அந்த டைரியில் ஹவாலா வழிகள் மூலம் துபாய்க்கு பணம் அனுப்பப்பட்ட தகவலும், அங்கு ஒரு நிறுவனம் தொடங்க வீணா விஜயன் முயற்சித்த தகவலும் இருப்பதாகவும், ஹவாலா முகவர்களிடம் இருந்து பதிவு செய்யப்பட்ட 'வாட்ஸ் அப்' உரையாடல்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
டைரியின் 3-வது பக்கத்தில் உள்ள ஒரு பதிவில் செப்டம்பர்-17 2024 எனத் தேதியிடப்பட்டுள்ளது. அதில், இந்தியாவில் இருந்து ரூ.85 லட்சம் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும், அதில் 3.49 லட்சம் ஐக்கியஅரபு அமீரக திர்ஹம்களை (அன்றைய இந்திய மதிப்பு ரூ.79.60 லட்சம்). பைஜாஸ் என்பவர் துபாயில் வைத்து பெற்றுக் கொண்டதாக தகவல் இருப்பதாகவும் அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. வெளிநாட்டில் ஒரு நிறுவனத்தை தொடங்க இந்தப் பரிவர்த்தனைகள் நடத்தப்பட்டதாக வீணா விஜயன் ஏற்கனவே விசாரணையின் போது தெரிவித்திருந்தார்.
ஆனால் இதை மறுத்துள்ள அமலாக்கத்துறை பினாமி பெயரில் புதிய நிறுவனம் நிறுவி, இந்தியாவில் லஞ்சம் மூலம் திரட்டப் பட்ட பணத்தை முதலீடு செய்வதே முக்கிய நோக்கமாக இருந்தது என குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் முகமது ரியாசுக்கு நெருக்கமானவர்கள் அளித்த வாக்கு மூலங்களும் ரியாஸ் மற்றும் வீணா விஜயனுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளன.
இந்தநிலையில் முன்னாள் மந்திரி முகம்மது ரியாசின் நண்பரான பெபீஷி டம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக கோழிக்கோட்டில் உள்ள அவரது வங்கி லாக்கரை அமலாக்கத்துறையினர் சோதனையிட்டனர். அதில் 50 பவுன் நகைகள் இருப் பதை அறிந்த அதிகாரிகள் தீவிர விசாரணைக்கு பிறகு அந்த லாக்கரை முடக்கி 'சீல்' வைத்தனர்.
இதுகுறித்து நடத்திய விசாரணையில் லாக்கரில் இருந்த 50 பவுன் நகை தனது சகோதரிக்கு சொந்தமானது என பெபீஷ் கூறியுள்ளார். இதுதொடர் பாகவும், முகம்மது ரியாஸ் மந்திரியாக இருந்தபோது வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்ட ஹவாலா பணம் குறித்தும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.