தேசிய செய்திகள்

சத் பூஜைக்கு தடை எதிரொலி.. ஏரிக்கரை நுழைவாயிலின் பூட்டை உடைத்த பக்தர்கள்

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம், காலா நகர் பகுதியில் உள்ள நகேலா ஏரிக்கரையில் சத் பூஜை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

மராட்டிய மாநிலத்தில் உள்ள ஒரு ஏரிக்கரையில் சத் பூஜை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பக்தர்கள், ஏரிக்கரையின் நுழைவு வாயில் பூட்டை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்துக்களின் பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் சூரிய வழிபாடும் ஒன்று. சூரியனைப் போற்றி வணங்கும் வகையில் வட மாநிலங்களில் சத் பண்டிகை 4 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டின் சத் பூஜை நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நீர்நிலைகளில் புனித நீராடி, சூரியபகவானை வழிபட்டு விரதம் இருக்கின்றனர்.

சத் பூஜையின் இரண்டாம் நாளான நேற்று விரதம் மேற்கொண்ட பக்தர்கள், அதிகாலையில் எழுந்து நீராடி சூரிய பகவானை வழிபட்டனர். நாள் முழுவதும் உணவு, நீர் எதுவும் உட்கொள்ளாமல் விரதம் இருந்து, மாலையில் கீர், இனிப்பு சப்பாத்தி, வாழைப்பழம் போன்ற பாரம்பரிய பிரசாதத்தை சூரிய பகவானுக்கும், அவரது சகோதரியான சத்தி மையாவுக்கும் படைத்து வழிபட்டனர். பின்னர் பிரசாதம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்தனர். அதன்பின்னர் 36 மணி நேரம் உணவு, தண்ணீர் எதுவும் உட்கொள்ளாமல் மேற்கொள்ளப்படும் முழு உபவாசத்தை தொடங்கினர்.

இந்த சிறப்பு வழிபாடு காரணமாக நீர்நிலைகளில் நேற்று சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

தடையும்.. அதிருப்தியும்

இந்நிலையில், மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம், காலா நகர் பகுதியில் உள்ள நகேலா ஏரிக்கரையில் சத் பூஜை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஏரிக்கரைக்கு செல்லக்கூடிய பிரதான வாயில் மூடப்பட்டது. இதனால் நேற்று பூஜை செய்வதற்காக அங்கு சென்ற பக்தர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். காலையில் பூஜை செய்வதற்காக சென்ற பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

அதேபோல் மாலையிலும் விரதம் மேற்கொண்ட பக்தர்கள், பூஜை செய்வதற்காக ஏரிக்கரைக்கு வந்தனர். அங்கு கேட் பூட்டப்பட்டிருந்ததால் ஆத்திரமடைந்த பக்தர்கள், பூட்டை உடைத்து ஏரி வளாகத்திற்குள் நுழைய முயன்றனர். இதனால் அப்பகுதியில் குழப்பமும் பதற்றமும் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.

அச்சோல் காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, பக்தர்களை கட்டுப்படுத்தி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

SCROLL FOR NEXT