திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை சீசன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் சுமார் 60,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் சுமார் சுமார் 60,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால், கூட்ட நெரிசலைத் தவிர்க்க கேரள அரசும் தேவசம் போர்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
அதன்படி, தினமும் அதிகபட்சமாக 80,000 பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதில், ஆன்லைன் முன்பதிவு மூலம் 66,000 பக்தர்களும், உடனடி முன்பதிவு மூலம் 14,000 பக்தர்களும் தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி தரிசனம் செய்வதை உறுதி செய்ய பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சன்னிதானத்தில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக, பக்தர்களின் வருகைக்கு ஏற்ப நிமிடத்திற்கு சுமார் 75 பேர் வீதம் 18-ம் படி ஏற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.