தேசிய செய்திகள்

விமானங்களில் 60 சதவீத இருக்கைகளுக்கு சீட் தேர்வு கட்டணம் வசூலிக்க கூடாது: டிஜிசிஏ உத்தரவு

ஒரே எண்ணில் பதிவு செய்யும் பயணிகளுக்கு அடுத்தடுத்த இருக்கைகளை ஒதுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானப் போக்குவரத்தில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை விதித்துள்ளது. இதன்படி, 60 சதவீத இருக்கைகளுக்கு சீட் தேர்வு கட்டணம் என தனியாக கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது விமான பயணங்களின்போது பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான இருக்கைகளை தேர்வு செய்து கொள்ளலாம். இதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக ஜன்னலோர இருக்கை, முன்பக்க இருக்கைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இது விமான பயணிகளுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில்,விமானத்தில் உள்ள இருக்கைகளில் 60 சதவீத இருக்கைகளை தேர்வு செய்ய கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளது. அதுமட்டும் இன்றி, ஒரே எண்ணில் பதிவு செய்யும் பயணிகளுக்கு அடுத்தடுத்த இருக்கைகளை ஒதுக்க வேண்டும்.

விமானங்களில் பயணிகளின் உடைமைகளை எடுத்து செல்வது, செல்ல பிராணிகளை கொண்டு செல்வது, இசை கருவிகள், விளையாட்டு உபகரணங்களை எடுத்து செல்வது தொடர்பான விதிகளை தெளிவாக வழங்க வேண்டும். விமான பயணம் தொடர்பான விவரங்களை ஒவ்வொரு பயணிக்கும் அவர்களது தாய் மொழியில் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.