தேசிய செய்திகள்

தாராவி மறுசீரமைப்புத் திட்டம்: 18 மாதங்களில் 10 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் - மராட்டிய முதல்-மந்திரி பட்னாவிஸ்

10 ஆயிரம் வீடுகளுக்கான சாவிகளை பயனாளர்களிடம் பிரதமர் மோடி ஒப்படைப்பார் என்று தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

மும்பை,

மராட்டிய மாநிலத்தின் தலைநகரான மும்பையின் மையப்பகுதியில், சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் ‘தாராவி மறுசீரமைப்புத் திட்டம்’ மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்திற்கான பணிகள் 2025 ஜனவரியில் தொடங்கின. தகுதியுள்ள குடியிருப்பாளர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதோடு, குடியிருப்பு, வணிக மற்றும் தொழிற்பகுதிகளை மறுசீரமைக்கும் நோக்கத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாராவி மறுசீரமைப்புத் திட்டத்தின்கீழ், அடுத்த 18 மாதங்களில் 10 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மராட்டிய சட்டசபையில் பேசிய அவர், “தாராவி மறுசீரமைப்புத் திட்டம் வெறும் வீட்டுவசதித் திட்டம் மட்டுமல்ல, தாராவி மக்களின் வாழ்க்கத் தரம் மற்றும் பொருளாதார சூழல் ஆகிய இரண்டையும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்னெடுப்பாகும். தாராவியில் அடுத்த 18 மாதங்களில் கட்டி முடிக்கப்பட உள்ள 10 ஆயிரம் வீடுகளுக்கான சாவிகளை பயனாளர்களிடம் பிரதமர் மோடி ஒப்படைப்பார்” என்று தெரிவித்தார்.