புதுடெல்லி,
வங்கிகளில் ரூ.3 கோடிக்கு மேற்பட்ட பெரிய தொகை டெபாசிட்டுகளுக்கு வட்டி நிர்ணயம் செய்வதில் வங்கிகளுக்கு கூடுதல் சுதந்திரம் அளித்து இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, பெரிய தொகை டெபாசிட்டுகளை வாடிக்கையாளர்கள் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு மற்றும் வங்கிகளிடம் இருக்க வேண்டிய பணப்புழக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அவற்றுக்கு வெவ்வேறு வட்டி விகிதங்களை வங்கிகள் நிர்ணயிக்கலாம்.
அதே நேரத்தில், ஒரே நாளில் பெறப்படும் ஒரே அளவிலான டெபாசிட்டுகளுக்கு வாடிக்கையாளர்கள் அல்லது வங்கிக் கிளைகளுக்கு ஏற்ப வெவ்வேறு வட்டி வழங்கக்கூடாது. அவற்றுக்கு ஒரே வட்டி விகிதம்தான் இருக்க வேண்டும். மேலும், பெரிய தொகை டெபாசிட் உள்பட அனைத்து டெபாசிட்டுகளுக்கும் வழங்கப்படும் வட்டி விகிதங்களை வங்கிகள் முன்கூட்டியே தங்களது இணையதளங்களில் வெளியிட வேண்டும்.
பெரிய தொகை டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை ஒவ்வொரு வேலை நாளிலும் காலை 10 மணிக்கு வெளியிட வேண்டும். குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் வட்டி விகிதங்களை தெரிவிக்கலாம். இந்த புதிய விதிமுறைகள் வருகிற அக்டோபர் மாதம் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகின்றன.