புதுடெல்லி,
இந்தியாவின் விமான போக்குவரத்து துறையை அடுத்தகட்ட டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், சர்வதேசப் பயணிகளுக்கான 'டிஜி யாத்ரா' சோதனை நடைமுறைகள் நாடு முழுவதும் உள்ள 7 முக்கிய விமான நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளன.
நவம்பர் முதல் டிசம்பர் (2026) வரை நடைபெறவுள்ள இந்த சோதன ஓட்டத்தில், இ-பாஸ்போர்ட் வைத்துள்ள தகுதியுள்ள இந்தியக் குடிமக்கள் இந்த அதிநவீன வசதியைப் பயன்படுத்தி கொள்ளலாம். முதற்கட்டமாக, ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்களால் இயக்கப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு, விமான நிலையங்களின் குறிப்பிட்ட முனையங்களில் இந்த டிஜி யாத்ரா அனுமதி வழங்கப்படுகிறது.
டெல்லி, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி, மும்பை, சென்னை மற்றும் அமிர்தசரஸ் ஆகிய 7 சர்வதேச விமான நிலையங்களில் இந்தச் சோதனை நடைமுறைகள் மிகத் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன. தேவையான உள்கட்டமைப்பு மற்றும் அதிநவீனத் தொழில்நுட்ப வசதிகள் செய்யப்பட்டுள்ள முனைய நுழைவாயில்கள் மற்றும் பாதுகாப்பு சோதனைப் பகுதிகளில் பயணிகள் இந்த சேவையை தடையின்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த சோதனை காலத்தில் பயணிகளிடம் இருந்து பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில், வரும் 2027ஆம் ஆண்டில் இத்திட்டத்தை நாடு முழுவதும் விரிவாக செயல்படுத்த சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
அதே நேரத்தில், இந்த வசதியானது தற்போதுள்ள வழக்கமான பயண நடைமுறைகளுக்கு மாற்றாக அல்லாமல், பயணத்தை எளிதாக்கும் ஒரு துணையாகவே அமைக்கப்பட்டுள்ளது. எனவே, சர்வதேச பயணிகள் தொடர்ந்து தங்களின் அசல் பயண ஆவணங்களை உடன் வைத்திருக்க வேண்டும் என்றும், விமான நிறுவனத்தின் கட்டாய ஆவணச் சரிபார்ப்புகள் மற்றும் குடிவரவு நடைமுறைகள் அனைத்தையும் வழக்கம்போல் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தியாவின் விமானப் போக்குவரத்து கட்டமைப்பு முழுவதும் டிஜி யாத்ராவின் பயன்பாடு அசுர வேகத்தில் விரிவடைந்து வருகிறது. தற்போது இந்தத் தளம் 26.5 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது. இதுவரை உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு சேவை வழங்கும் 39 உள்நாட்டு விமான நிலையங்கள் வழியாக 110 மில்லியனுக்கும் அதிகமான தடையற்ற பயணங்களை இது சாத்தியமாக்கியுள்ளது. இதனை தொடர்ந்து, வரும் 2027ஆம் ஆண்டுக்குள் மேலும் 25 உள்நாட்டு விமான நிலையங்களை இந்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் கீழ் கொண்டுவர மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.