தேசிய செய்திகள்

டிஜிட்டல் கைது; மங்களூருவில் முதியவரிடம் ரூ.2.07 கோடி மோசடி

நூதன முறையில் முதியவரிடம் மோசடி செய்து பணம் பறித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

பெங்களூரு,

தொழில்நுட்ப வளர்ச்சியால் நமது வாழ்வை எளிமையாக்கும் வகையில் பல்வேறு நவீன கண்டுபிடிப்புகள் நாள்தோறும் பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம், தொழில்நுட்ப வளர்ச்சியை தவறான நோக்கத்துடன் பயன்படுத்தி, அப்பாவி மக்களிடம் இருந்து பணம் பறிக்கும் கும்பலும் மற்றொரு புறத்தில் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.

அந்த வகையில் மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் 'டிஜிட்டல் கைது' என்ற மோசடி வலையில் சிக்கி பலர் தங்கள் பணத்தையும், நிம்மதியையும் இழந்துள்ளனர். 'டிஜிட்டல் கைது' என்பது, மோசடி கும்பல் சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகளை போல பேசி பொதுமக்களை வீட்டில் சிறை பிடித்து பணம் பறிப்பதாகும். இதுபோன்ற டிஜிட்டல் கைது மோசடிகள் நாடு முழுவதும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், டிஜிட்டல் கைது மோசடி கும்பலிடம் முதியவர் ஒருவர் ரூ.2.07 கோடி பணத்தை இழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த மார்ச் 31-ந்தேதி, மங்களூருவைச் சேர்ந்த 61 வயது முதியவரை தொலைபேசி மூதல் தொடர்பு கொண்டு பேசிய மோசடிக்காரர்கள், “நாங்கள் தேசிய தரவுகள் பாதுகாப்பு மையத்தில் இருந்து பேசுகிறோம். உங்கள் அடையாள அட்டையை பயன்படுத்தி மும்பையில் போலி சிம் கார்டு வாங்கப்பட்டுள்ளது. அது போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

இதைக் கேட்டு பயந்துபோன முதியவர், தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு மோசடிக்காரர்கள், “உங்கள் மீது மும்பை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த வழக்கை விசாரிப்பார்கள்” என்று கூறி மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து அந்த முதியவருக்கு வாட்ஸ் அப் மூலம் பல்வேறு நபர்கள் தொடர்பு கொண்டு தங்களை மூத்த அரசு அதிகாரிகள் என்று கூறி பேசியுள்ளனர். மேலும், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் நாங்கள் சொல்லும் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி வைக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இதனை நம்பி அந்த முதியவர், அவர்கள் கூறியபடி, கடந்த ஏப்ரல் 7-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மொத்தமாக ரூ.2.07 கோடி பணத்தை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அதன் பிறகே இது ஒரு மோசடி என்பது அவருக்கு தெரியவந்தது. பின்னர் இது குறித்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.